7/22/09

அரசூர் வம்சம்

ஜெயமோகன் 2கோடி தமிழர்கள் தமிழகத்துக்கு வெளியே வாழ்வதாக ஒரு கணக்கைச் சொல்கிறார்.இத்தனை பேரும் அடுத்த தலைமுறை
அதற்கடுத்த தலைமுறை என்று அவரவர் சமூகம் சார்த்த அறக்கோட்பாடுகளையும் வழக்கங்களையும் மொழியையும் சேர்த்துக்கொண்டும் சிதைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படி ஒரு தலைமுறை, கடைக்கு போய்விட்டு வீட்டுக்குள் நுழையும் போது அமர்ந்திருக்கும் விருந்தாளியைப்போல்,சடக்கென உங்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டதைப் போன்றதொரு உணர்வு வருகிறது அரசூர் வம்சத்தை படிக்கும்போது. பனியன் சகோதரர்கள் வருகிறார்கள், வயசன் பறக்கிறார், முடிந்துகொண்டு நலங்குப்பாடல்களை மூத்தகுடிப்பெண்டுகள் பாடுகிறார்கள் நட்ட நடுவே ஒன்றும் புரியாமல் நீங்களும் அமர்ந்திருக்கிறீர்கள்.



மாய எதார்த்த நாவல்கள்(magical realism) வகை நாவல்கள் காலக்கயிற்றில் மாட்டிக்கொண்ட காத்தாடிப்பட்டம் போல் இல்லை இல்லை.. ஊடுநூலும் பாவு நூலும் போல.. வேண்டாம் ஒரு Pendulum போல உங்களை முன்னும் பின்னும் இன்னும் கொஞ்சம் முன்னும் என்று மாற்றி மாற்றி கொஞ்சம் தலைசுற்ற வைக்கிற கதைசொல்லும் வடிவம்.
காபரியேல் மார்க்யூசு சொல்வது போல் கொஞ்சம் அசந்தால் விவரணைகளிலிலேயே சிக்கி மூச்சுத்திணரும். கொஞ்சம் வெளியே வந்து பார்த்தால் வண்ணங்கள் புலப்படும்.கலைடாஸ்கோப்புக்குள்ளிருந்து கலைடாஸ்கோப்பை பார்ப்பது போலத்தான் மாய எதார்த்த நாவல்களும்.எங்கிருக்கிறோம் என்று புரியாவிட்டால் ரசிக்காது.எரிச்சல்
வரலாம்.

அதை எழுத்தில் கொண்டுவருவதற்கான மொழியாளுமை சாதரணமானது கிடையாது. அதுவும் கதையை அதே போக்கில் திகட்டாமல் கொண்டு செல்வது எழுதாளர்களுக்கு ஒரு சவால்தான். ஒவ்வொரு எழுத்தாளுரும் ஒருமுறையாவது அந்த முயற்சியில் எட்டிப்பார்த்து இருப்பார்கள்.அந்த சாதுரியமும் மொழியாளுமையும் இரா முருகனுக்கு அதிகமாகவே இருக்கிறது. பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் என்றால் அது சிறுமைப்படுத்துவதாகிவிடும்.

அழிந்துபோகும் அரண்மணையையும், மெதுவாய் மாறும் அரசூரையும், புகையிலை வியாபாரம் செய்யும் பிராமணர்களையும், புகையிலை வாசனையையும், பழுக்காத்தட்டு சங்கீதத்தையும் எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் இராமு. கப்பலிலும், வீட்டிலும், ஊஞ்சலிலும், அழுக்கேறிய மாடிகளிலும்,அரங்குகளிலும் வரைமுறையின்றி அழுக்கும்,
வியர்வையும், முடைநாற்றுமுகாக எல்லாவகையான காமக்களியாட்டாங்களும் காட்சிப்படுத்தப் படுகிறது. விரசமாய், ஆபாசமாய், அறுவாறுப்பாய் இளிவரலோடு கருதப்படும் பலதும் மறைபொருளின்றி விவரிக்கப்படுகிறது. எல்லாக் காலங்களிலிருந்தும், எல்லாப்பக்கங்களிலிருந்தும், எல்லா வகையான மனிதர்கள், போனஜென்மத்து மனிதர்கள் என்று வகை வகையாக மனிதர்கள் வந்துபோய்க்கொண்டே இருக்கிறார்கள்.ஆச்சரியமளிக்கும் பல மனிதர்கள்(கிறித்தவ பிராமண உட்பிரிவில் ஒருவர்.வரலாறு அறிய ஆவல்)வருகிறார்கள்.

அரசூரில் வசிக்கும் ஒரு பிராமணக்குடும்பம் எப்படி காலவோட்டத்தில் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தொடர்புடைய பல்வேறு மனிதர்களுடன் கதை நகர்கிறது அவ்வளவுதான். ஒருகட்டத்தில் கதையோட்டத்தில் தொய்வு ஏற்படுகிறது.

தொய்வுக்கு காரணம் மறுபடி மறுபடி ஒரேமாதிரி மனிதர்களின் குணநலன்கள் மற்றும் காட்சிப்படுத்துதல். ஏனென்று யோசிப்பதில் புதிதாய் தோன்றும் மனிதர்களும் மனிதர்களாகவே இருப்பதும் ஒரு காரணம். அதாவது மனிதர்களுக்கான அடிப்படை குணங்கள் எந்த நூற்றாண்டானாலும்,இடமானாலும்,இனமானாலும் மாறுவதில்லை என்ற குறிப்பதாலும் இருக்கலாம். இது திட்டமிட்டு புனையப்பட்டதா அல்லது என் மேம்போக்கான வாசிப்பு எதிர்பார்ப்பினாலும் இருக்கலாம்.

இராமுருகனின் மொழிநடையில் ஏற்பட்ட தொய்வா என்பது மறுவாசிப்பில், மறுவாசிப்பு என்பதை திரும்பப் படிப்பது என்றே கொள்ளுகிறேன் இங்கே, புரியலாம் அல்லது புரியாமலே போகலாம். இப்போதைக்கு, சுலபமாக, மொழிநடையில் தேக்கம் என்றே பதிவுசெய்கிறேன்.

நான்காண்டுகளுக்கு முன் படித்த காப்ரியேல் மார்க்யூசின் Love in the time of Cholera படித்தபோது பக்கங்களை நகர்த்தித் தள்ள வேண்டி இருந்த்து. பெரும் ஆயாசத்துடம் படித்து முடித்தேன்.

உணவிலும், புத்தகத்திலும் எடுத்ததை முடிக்காமல் இருப்பின், எவ்வளவு மோசமாக இருந்தாலும், கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்குவது என் கிறுக்குத்தனங்களில் ஒன்று. முழுமுதல் காரணம் புரியாத இடங்களும்,பார்க்காத வழக்கங்களும்.இரண்டாவது காரணம் நிறைய புதினங்கள் மற்றும் காத்திரமான புத்தகங்களை வாசிக்காத அனுபவமின்மை. அதனாலேயே பெரும் ஆயாசமாய் உணர்ந்தேன். முதல் பிரச்சனை அரசூர் வம்சம் வாசிக்கும்
சிலருக்கு வரலாம். குறைந்தது மலையாளமொழியுடனான என் மிகச்சிறிய பரிச்சயத்தால் (என் உறவினர் பலர் இன்றும் தென்கேரளத்தில் வாழ்கிறார்கள்), சில குழப்பத்தமிழர்களுடுனான
நட்பால் அரசூர் வம்சத்தின் தமிழ்சொற்களிலிலும் அவர்கள் பயன்படுத்தும் சொல்லாடல்களைய பெரிதும் உணரமுடிந்தது.மிகவும் ரசித்தது 'வார்த்தைச்சொல்றது'('பேசுவது') போன்ற வழக்கு மொழிகள். மேலும் என்னால் இராமுருகனின் ஆழமான ஆராய்ச்சியை புரிந்துணர்ந்து ரசிக்கவைக்கிறது. உழைப்பைப்பார்த்து பிரமிக்கவைக்கிறது.

தீவரதமிழ் வாசகனாக(முகத்த உர்ர்னு வச்சுக்கறவங்களா??) விரும்புவோர் ஒருமுறையாவது வாசிக்க வேண்டிய புதினம். இப்படி எல்லாம் சொல்ற அளவுக்கு நான் பெரிய வாசிப்பாளி
இல்லை அதனால.. டிவிட்டரில் போட்ட அதே ஒருவரி விமர்சனத்தை போடுகிறேன். 75% அட்டகாசம் அரசூர் வம்சம்.

என் ego engineஐ பத்தவைத்து, இந்தப்பதிவை அல்லது புத்தகவிமர்சனத்தை எழுதவைத்த யாத்ரீகனுக்கு நன்றிகள்.

7/8/09

சிந்தாநதி - அஞ்சலி

நேற்று டிவிட்டரில் சிந்தாநதி மறைந்துவிட்டார் என்ற செய்தியைப் பார்த்தபோது மிகவும் அதிர்ந்துபோனேன். சிந்தாநதி என்னும் பெயரைக்கேட்ட உடனே எனக்கு நினைவுக்கு வருவது அவரின் 'எண்ணச்சுழலில் எதிர்நீச்சலிட்ட எழுத்துப்படிமங்கள்' என்னும் கவித்துவமான வரிகள் தான். இரண்டு வருடங்களுக்கு முன் மிகவும் துடிப்போடு தமிழ்ப்பதிவுலகில் இயங்கிக்கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போய்விட்டார். பதிவுலகில் மிக மிகச்சிலருடன் மட்டுமே மின்னரட்டையில் பேசுவதுண்டு.அவர்களில் ஒருவர் சிந்தாநதி. இரண்டு மாதங்கள் முன் திடீரென ஒருநாள் வந்தவரைக்கண்டு மகிழ்ந்தேன். சில நிமிடங்கள் பேசியதிலேயே, எதோ பிரச்சனைகள் வரமுடியவில்லை என்றார். அவரின் இயர்பெயர் என்ன எனபது கூட தெரியாது.பல இடங்களிலும் அவரே இயர்பெயரை குறிப்பிடாமல் தவிர்த்தது கண்டு நாகரிகம் கருதி கேட்காமலே இருந்துவிட்டேன். இப்போது கேட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. இன்னும் சில நிமிடங்கள் பேசி இருக்கலாம்.ஏதாவது உதவி தேவையா என்று கூட கேட்டிருக்கலாம். இப்போது வருந்துகிறேன்.

முன்பெல்லாம் அடிக்கடி அரட்டையில் வருவார்.மிகவும் பின்னரவாகக்கூட இருக்கும்.அமரிக்க பகல் நேரத்தில் என்ன இந்த இந்த நேரத்தில் என்றால் ஏதாவது அவர் பணிசெய்யும் கணித்தமிழ் வேலையை விவரிப்பார். கணித்தமிழ் சுவடி உருவாக்கியபோது என்னிடம் அனுப்பி கருத்துகள் கேட்டார். சற்றுமுன், கணிமை.காம் உருவாக்கிய போது எப்படி இருக்கு ஒரு வார்த்தை கேட்பார். என்னை மாதிரி துக்கடா பதிவனிடம் கூட கருத்துக் கேட்டு மாற்றங்கள் செய்யும் அவரின் பண்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவரிடம் சொல்லியும் இருக்கிறேன். மிகவும் இனிமையாக உரையாடுவார்.

அவரின் பின்புலம் எதுவுமே தெரியாது. இப்போது அவரின் அஞ்சலிப் பதிவுகளைக் கண்டபோதுதான் நோய்வாப்பட்டு இருந்திருக்கிறார் என்றே தெரிகிறது. தமிழ்க்கணிமை நல்ல ஒரு மனிதரை இழந்துவிட்டது நமக்கு பேரிழப்பே.

நான் படித்த முதல் தமிழ்ப்பதிவு அவருடையது தான் என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் மேலும் கனக்கிறது. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்ளுகிறேன். எவ்வகையிலாவது உதவி தேவை என்றால் குடும்பத்தார் தயங்காது கேட்குமாறு வேண்டுகிறேன்.

மற்ற அஞ்சலிப் பதிவுகள்.

ரவியின் அஞ்சலிப்பதிவு

காசியின் அஞ்சலி

சிந்தாந்தியின் பதிவில் அஞ்சலி

வலைச்சரத்தில்

சங்கம்

K.S Nagarajan அஞ்சலி

செந்தழல் ரவியின் அஞ்சலி

5/13/09

மே மாத புகைப்பட போட்டிக்கு


மே மாத புகைப்பட போட்டிக்கான என் படம்.

3/9/09

எகொஇச?

ஆங்கிலச்சொற்களை ஆங்கிலத்திலேயே எழுதுவது நான் அடிக்கடி முயலும் சங்கதி. மின்னஞ்சல்களில், ட்விட்டரில் எல்லாம். எத்தனை கலப்படம் செய்கிறேன் என்று அறிந்துகொள்வதற்காக.
படத்தை பாருங்கள்.
சட்டென்று முகத்தில் அறையும் கலப்படம் தெரிவது முன்னேற்றமா அல்லது இன்னும் மிச்ச்சொச்சம் மறைந்து ஆங்கிலமே அகிவிட்ப்போவத்தற்கான வீழ்ச்சியா? தெரியவில்லை. இப்போதைக்கு தோன்றுவது தலைப்பு.



3/7/09

ஆறு வார்த்தைக் கதைகள்

டிவிட்டரில் எழுதிய ஆறுவார்த்தைக்கதைகள், ஒரு வரிக்கதைகள். டிவிட்டிரில் அழிந்தே போய்விடுகிறது. சேர்த்துவைத்தலுக்காக இங்கே பதியப்படுகிறது.
1) 'டேய் குப்பையை அள்ளிப்போட்டு வாசலை பெருக்கி சுத்தம்பண்ணீட்டு காசு வாங்கிட்டுப்போ' பத்து வயது முத்துவை விரட்டினார் பிளேஸ்கூல் மொதலாளி.


ஆறுவார்த்தைக் கதைகள்
1) நாவல்.சிறுகதை.ஆறுவார்த்தைக் கதைகள்.சைக்கியாட்ரிஸ்டுகளுக்கு ஏறுமுகம்

2)பின் தூங்கி. முன் எழுவார். பத்தினிகள். பதிவர்கள்

3)வெளிநாட்டு வாழ்க்கை. கைநிறையக் காசு. பெற்றோர் படமாக

4)கட்டுப்பாடற்ற பொருளாதாரம். CVS பார்மஸியில் சிகரட் விற்பனை

1/6/09

சிறுகுற்றம் பெருங்கேடு

முதலில் சொல்லிவிடுவது நலம்: பலருக்கு இது வெறும் நூறு ரூபாய் குற்றம்.

நாடோடி வாழ்க்கையில் இரண்டு மாதம் மின்கட்டணம் கட்டாமல் கிடந்த்து. அதை இன்று காலை கட்டிவிடலாம் என்று வீட்டருகில் இருக்கும் பெஸ்காம்(BESCOM) தன்னியக்க சேவை மையத்துக்கு சென்றேன். இந்த இயந்திரங்கள் வழக்கமாகவே சில ரூபாய் நோட்டுக்கள் பிடிக்காமல் துப்பிவிடும். சில தாள்களை இவை ஏற்காது துப்பிவிடுவது நேர்வதுதான். ஏற்றகாசுக்கு
ஒழுங்காக கணக்கு காட்டும். வழமையாக மின்கட்டணம் கட்டுவது இங்கேதான் என்பதால் கட்டவேண்டிய 626ரூபாய்க்கு கூடவே ஒரு நானுறு ஐநூறு ரூபாய் இருப்புடனே சென்றேன்.எனக்கு முன் வந்த ஒரே ஒருவர் மட்டும் ஒரு காசோலையை அதை ஏற்கவைக்க மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். வழக்கமாக காசோலைகளை உடனே ஏற்றுக்கொண்டுவிடும்( குறைந்தபட்டசம் இம்மைய இயந்திரம்). அவர் சரி வேலைக்காகாது என்று எனக்கு வழிவிட்டார்.

ஒரு நூறு ரூபாயைக்கூட ஏற்காமல் துப்பிக்கொண்டிருந்தது. மற்றவர் ஐநூறு ரூபாய்த்தாளை கடனாகக் கொடுத்தார்.அதையும் ஏற்கவில்லை. சிறிது நேரம் தாள்களை மாற்றி மாற்றி மல்லுக்கட்டியபோது ஒரு நூறுரூபாய்தாளை ஏற்றுக்கொண்டது. கதையை சுருக்க ஒரு ஐநூறு ரூபாய்த்தாளையும் ஏற்றுக்கொண்டு கணக்கு காட்டியது. அடுத்து ஒரு நூறு
ரூபாயை தின்றுவிட்டு கணக்கு காட்டவில்லை. காலையிலேயை ஆரம்பிச்சாச்சு விவகாரம் என்று நினைத்துக்கொண்டே மனம்தளரா விக்கரமாதித்தனாக அதோடு போராடி பத்து மற்றும் இருபது ரூபாயை ஏற்றிவிட்டு அலுவலைமுடித்தால் ரசீது வரவில்லை.


இவ்வியந்திரம் ஒரு சிறிய அறையின் முன்வாசலில் இருந்தது. அருகில் ஒரு கதவு தாழிடாமல் இருந்ததது. திறந்து உள்ளே சென்றால் இயந்திரத்தின் பின்பகுதியை மூடியவாறு ஒரு சிறு கண்ணாடி அறை. எதுவும் தெரியாமல் இருக்க உட்பக்கமாக Thermocol ஒட்டி வைத்து இருந்தது. கொஞ்சம் உற்று பார்த்தால் ஒரு மனிதனின் கைதெரிந்தது. அறையின் கதவு உட்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. கதவை இருமுறை தட்டினேன் பதிலில்லை. உள்ளிரந்தவன் ஒளிவது தெரிந்தது. வந்த கோபத்தில் விட்டேன் நான்கு உதை.
கதவை சிறிதாக திறந்து 'ஏனு பேக்கு' என்றான். இந்தியில் பில் வரவில்லை என்றேன்.திரும்பி இயந்திரத்தை திரும்பி பார்த்தான். கிடைத்த இடைவெளியில் பார்த்தால் இயந்திரம் முழுக்க பிய்த்துபோட்டு திறந்தமேனியாக இருந்தது. அமைதியாக அவன் உட்பக்கமாக கையை விட்டு பில்லை கிழித்து கொடுத்தான். சற்றே கிடைத்த கதவிடுக்கில் கையை வைத்துக்கொண்டு நூறு ரூபாயை தின்று விட்டது என்றேன். ஏனு ஏனு என்று புரியாதவனாக விழித்துவிட்டு இந்தி கொத்தில்லா என்றான்.
'நனகே கன்னடா பரத்தே' என்று கன்னடத்துக்கு தாவினேன். இதை முதலில் அவன் எதிர்பாக்க்கவில்லை. திரும்பவும் விளக்க 'ஒருமணி நேரம் கழித்து வா' வேறொருவர் வந்து பில்லை சரிபார்ப்பார் என்றான்.

உடனே கதவை விலக்கி அவன் சட்டையை கொத்தாக பிடித்தேன்.அடுத்து அருகிருத்த மின்சார ஸ்விட்சுகளை அணைக்க
முயன்றேன். நெற்றியில் விபூதி கீற்றுடன் அமைதியான முகத்துடன் இருந்தவன் சடக்கென்று சட்டையை பிடித்ததை அடுத்து எதிர்ப்பாக்கவில்லை. நெடுநெடு மாறன்களும் அழுக்கு குலையா ஐடி கம்பெனி காரர்களையும் மட்டுமே பார்த்தவனுக்கு மற்றோர் போலவே போனாப்போகுது என்று விட்டுவிட்டு போய்விடுவேன் என்று நினைத்தான் போலும். பதறிவிட்டான். மிக சிறிய அறையில் அவனை சுவற்றோடு அழுத்தி சட்டையையும் பிடித்ததால் அவனால் நகர முடியவில்லை. சுதாரித்து நான்
அரசாங்க ஊழியன் என்றான். ஐடி கார்டை காட்டு என்றேன். திரும்பவும் ஏதோதோ சொல்ல முயன்றான். அவனை விட்டுவிட்டு வெளியில் இருந்தவரை கூப்பிட்டு போலீசை கூப்பிடுங்கள் என்றேன். திரும்பவும் ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்தவனை ஒன்று நீ ஐடி கார்டை காட்டு அல்லது இயந்திரத்தை நான் அணைக்கப்போகிறேன் அடுத்து காவல்துறை வரும்
என்றேன்.

திருதிருவென விழித்துவிட்டு நீங்க நெசமாவே நூறு ரூபா போட்டு பில் வரலையா என்றான்.உங்கிட்ட ஐடி கார்ட் இல்லை இனிமே கேள்வி கேட்டால் மண்டையை உடைத்துவிடுவேன் என்றேன். இருங்க வரேன் என்று கண்ணாடி அறையில் நுழைந்தவன் ஒரு நோட்டு புத்தகத்துடன் வந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை குடுத்துவிட்டு 'நான் இதுல உங்க பில் நம்பரை
எழுதிக்கிறேன். நாங்க அப்புறமா சரி பாக்கறோம். நெசமாவே பணம் இருந்துதுனா பரவாயில்லை இல்லைன்னா நீங்க திரும்பிவந்து இந்த நூறு ரூபாயை குடுங்க என்றான'. " என்னை இன்னுமாடா பயந்த சொங்கிப்பய என்று நினைச்சுகிட்டு இருக்க" என்ற நினைத்தவறே திரும்பி வந்தேன்.

1. மேல் நடவடிக்கை எடுக்காத காரணம். உள்ளே இருப்பவன் கட்டாயம் திருடன் இல்லை. இதில் யார் யாரோ சம்பந்தப்பட்ட ஒரு குற்ற வலை. பெங்களுரில் எந்த விதமான பின்புலமும் இல்லாத நான் இதை தட்டிக்கேட்பதை விட வேறு வழிகளை பார்ப்பது நலம்.

2. உள்ளூர் மொழி தெரியாமல் அதை கற்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பல இந்திக்காரர்களை உள்ளூர் ஆட்கள் கொள்ளை அடிப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். இலக்கணப்பிழையுடனான சிலபல ஆங்கில மற்றும் இந்தி வார்த்தைகளுமான கன்னடமாக இருப்பினும் பேசத்தெரிந்து இருக்காவிடில் கட்டாயம் வேலைக்கு உதவாது

3. நூறு ரூபாய் தானே திரும்பிவிடலாம் என்றே உண்மையில் முதலில் நினைத்தேன். வெறும் ஐந்துக்கும் பத்துக்கும் சென்னை நகர சாலைகளை கால்களால் தேய்த்த பல நாட்கள் நினைவில் நிழலாடியது. விடத்தோன்றவில்லை.

4. இனிமேல் இணையவழி செலுத்துதலை மட்டுமே செய்வதாக உத்தேசம்.

5. இந்த தளத்தில் போய் அழுதாயிற்று.

10/2/08

ஜெயாக்கா!!

ஊருக்கே அவர் ஜெயாக்கா தான்.4;30 க்கு எழுந்து டாக்டர் வீட்டுக்கு சொஸைட்டியில் பால் வாங்கி வருவதிலிருந்து பதிணொண்ணோ பன்னிரண்டோ அடிக்கும் வரை வாரம் ஏழு நாட்களும் ஊரெல்லாம் கால்கள் ஓடிக்கொண்டிருக்கும். நாலே நாலு மிக நீண்டதெருக்களுள்ள ஊரில் அவர் வேலை செய்யாத வீடு என்று எதுவும் கிடையாது.

தாலுகாபீஸ் அம்மாவுக்கு வீட்டிலேயே பிரசவத்தின் போது செவிலி வேலை முதல் குழந்தைவளர்ப்பு வேலை. கடைக்காரர் வீட்டில் தினசரி வீட்டு வேலை. மைத்துனரின் ஓட்டலில் பாத்திரம் தேய்க்கும் வேலை இதைத்தவிர ஒரு அலுவலகத்தை பெருக்கும் வேலை இதைத்தவிர அவ்வப்போது அழைக்கும் வேலைகள் என்று வேலை ஓடிக்கொண்டிருக்கும். பொதுவில் ஊர் அவரிடம் மிகவும் அன்பாகவே நடந்துகொண்டது. அல்லது இளம்பருவத்தில அவ்வாறே எனக்குப்பட்டது.

தேவையென்றால் கடன் வாங்கிச்செல்வார் வேறு ஒருவரிடம் கடன் பெற்றோ உழைப்புக்கு முனபணமோ பெற்று அந்தக் கடனை சில வாரங்களில் அடைப்பார். உழைப்பு மட்டுமே மூலதனம். ஒரே கனவு, குறிக்கோள் வகைக்கு இரண்டான தன் நான்கு குழந்தைகளையும் படிக்க வைக்கவேண்டும் என்பதே. பெரியவனுக்கு பத்து வயதிருக்கும். கடைசி பெண்ணுக்கு மூன்று நான்கு வயதிருக்கும்.கணவர் பெரும் குடிகாரர். வேலை எல்லாம் செய்து பார்த்ததே கிடையாது. எப்போதாவது ஜெயாக்கா அம்மாவிடம் தெருவில் போகும் போது நாலு வார்த்தை பேசிவிட்டுப் போவார். அச்சமயம் அடியும் சண்டையும் பற்றி ஓரிரு வார்த்தே சொல்லக்கேட்டு இருக்கிறேன். வேலைக்கு ஆள் வைக்கும் அளவுக்கு எங்கள் வீட்டு பொருளாதாரம் இடம் கொடுத்ததில்லை. ஒருமுறை ஏதோ காரணத்திற்காக வீட்டுக்கு வந்தவர் வீட்டின் ஒரு மூலையில் படுத்து உறங்கிவிட்டார். அவர் திடீரென்று படுத்து தூங்கிட்டார் என்று அம்மாவிடம் போய் சொன்னேன். அம்மா பதறி அடித்து ஓடி வந்து தண்ணீர் தெளித்து எழுப்பி சாப்பிட வைத்தார்கள். மயக்கம் என்ற வார்த்தையும் அதற்கான விளக்கமும் முதல் முறை அப்போது தான் தெரியும். சரியாகப் புரியவில்லை.

மைத்துனர் வைத்திருந்த சிறிய சாப்பாட்டுக்கடையில் கூட வேலை செய்வாரே தவிர சாப்பிட மாட்டார். குழந்தைகளையும் சாப்பிட அனுமதிக்க மாட்டார். அவருக்கு தெரியாமல் கொடுத்தால் தான் உண்டு.

பெரியவன் ஒரு முறை பீடி பிடிக்கிறான் என்று தெரிந்தது அவருக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருந்திருக்கவேண்டும். அடி பின்னி எடுத்துவிட்டார். கணவரைப்போல தன் மகனும் சீரழிந்து விடுவானோ என்று பயந்து விட்டார்.கடன் கொடுத்தவரோ யாரோ என்ன சொன்னார்களோ தெரியவில்லை ஒரு நாள் பெரியவனை தவிர மற்ற மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு வெகு தொலைவில் இருந்த BDO அலுவலக கிணற்றில் தன் இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி போட்டு விட்டார். என்ன புரிந்ததோ தெரியவில்லை அம்மா செய்வதை பார்த்த இளைய மகன் அங்கேயிருந்து ஓட ஆரம்பித்துவிட்டான். கண்ணெதிரே மகள்கள் இறப்பதையும் பார்த்துவிட்டு கடைசி நமிட பயத்தில் ஆலாய்ப்பறந்து விட்டு கிணற்றில் குதித்துவிட்டார் ஜெயாக்காவும். எதிர்பாரா இடத்தில் சிறுவன் ஓடிவருவதைப்பார்த்த பெரியவர் ஒருவர் பிடித்து கேள்வி கேட்க அவன் சொன்னதைக்கேட்டு ஓடிப்போய் கிணற்றில் குதித்து ஜெயாக்காவையும் குழந்தைகளையும் காப்பாற்றி இருக்கிறார். ஜெயாக்கா மட்டுமே பிழைத்தார். நீதிமன்றத்தில் கொலை செய்யத்திட்டமிட்டது, தற்கொலை முயற்சி, இரண்டு கொலைகள் என்று பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை கொடுத்த அன்று அவருடைய கணவர் தெருத்தெருவாக குடித்துவிட்டு பைத்தியம் பிடித்ததுபோல் ஓடியது இன்றும் நினைவில் இருக்கிறது.அவர் மகன் சில மாதங்களுக்கு பிறகு தற்கொலைக்கு முயன்று சிறவர் சிறைச்சாலையிலோ மனநலகாப்பகத்திலோ சில மாதங்கள் இருந்து விட்டு படிப்பை நிறுத்தி விட்டு வேலை செய்யப்போய்விட்டான்.

சில மாதங்கள் தனிமைச்சிறையில் இருந்து விட்டு பொதுசிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட ஜெயாக்கவை மாதம் ஒருமுறை வேலூர் சிறைக்கு போய் வந்து மனைவி நன்றாக இருப்பதாகவும் இறந்த குழந்தைகளை நினைத்து அழுவதாகவும் மட்டும் தானாகவே சொல்லித்திரிவார் கணவர். குடியை மொத்தமாக நிறுத்திவிட்டதாகவும் எப்போதாவது குடித்துவிட்டு விழுந்து கிடந்ததாகவும் ஊர் சொல்லக்கேள்வி.

காந்தி பிறந்த நாளை உலக மதுஒழிப்பு தினமாக அறிவிக்க இந்திய அரசு கோரி இருந்தது என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

 
கற்றது கைமண்ணளவு © 2009