முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார். உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும்
வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால்
பதிலளிக்க முயல்கிறேன்.

தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி ..

கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா?
இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய
தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும்.

எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக்கமா?அல்லது தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் கூடி கருத்து பரிமாறி கொள்வது இதன் நோக்கமா?
தமிழை தனியாக எப்படி பட்டறை மட்டும் நடத்தி வளர்க்க முடியும் என்று நினைக்கிறீர்ள்? அவ்வாறு யாராவது கூறினார்களா? முதலில் கணினியில் தமிழில் தட்டச்சு செய்யவியலும்
என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. உங்களுக்கு தெரிந்திருக்கிறதே. நீங்கள் சில பேருக்கு சொல்லித்தந்திருப்பீர்கள் தானே. அதே போல் தாங்கள் அறிந்த விடயங்களை இன்னும் நாலு
பேருக்கு சொல்லித்தரும் எண்ணமே இந்த பட்டறையின் தலையாய நோக்கமாக நான் அறிகிறேன்.

தமிழில் அதிகம் blogs வருவதன் மூலம், தமிழ் வளர்ந்து விட போகிறதா?தமிழில் பதிவுகள் அதிகம் வருவதன் மூலம் தமிழ் கட்டாயம் வளரும். எனக்கு தெரிந்து என் தமிழறிவு இதன் மூலம் இன்னும் செழுமை அடைந்திருக்கிறது. என்னைடைய பேச்சுத்தமிழ்
இன்னும் தெளிவாக கல்ப்பில்லமல் பேச வருகிறது. இப்பொழுது நான் எனக்கு தெரிந்தவர்களிடம் பேசும் போதும் எழுதும் போதும் அவர்களுக்கும் நற்றமிழ் வார்த்தைகள் தெரியுமில்லையா.
அவர்களும் பின்பற்றுவார்கள் இல்லையா. நாம் எத்தனை சினமாப்பாடல்களையும் ஊடகங்களிலும் தமிழை கொச்சப்படுத்துவதை பார்க்கிறோம. வெறும் குறை மட்டுமே கூறிக்கொண்டு
திரிவதை விட அடுத்த தலைமுறை ஊடகமான இணையத்தில் நாம் புகுத்தும்போது மற்ற ஊடகங்களிலும் மாற்றம் வருமா இல்லையா? சிறு துளி பெருவெள்ளமில்லையா?


ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எதாவது செய்யலாமே? அதற்கு உங்கள் பட்டறை எந்த வகையிலாவது உதவுமா?

சோற்றுக்கு வழியில்லாமல் இருப்பது எதனால்? கல்வி அறிவின்மையால், விழிப்புணர்வின்மையால். ஊடக வெளிச்சம் எல்லாருக்கும் கிடைக்கிறதா. நாட்டில் இருப்பது வெறும் அறிவுப்பஞ்சம் மட்டுமல்ல விழிப்புணர்வுக்கும் பஞ்சம்தான். படித்தவனுக்கு படிக்காதவனின் கஷ்டம் தெரிவதில்லை. அதற்கும் விழிப்புணர்வு தேவை.
படிக்காதவனுக்கு அவனுக்கு கிடைக்கும் உரிமைகூட தெரிவதில்லை. தலைமுறை இடைவெளி போல படித்தவனுக்கும் படிக்காதவனுக்குமான இடைவெளி தொழில்நுட்பத்தின் மூலம் தான்
குறைய முடியும். இதுவும் ஒரு தலைசிறந்த ஊடகம். அதை உபயோகிக்க ஏன் தவற வேண்டும்.சரி. நீங்கள் இந்த பிரச்னைக்காக என்ன செய்திருக்கிறீர்கள். கட்டாயம் செய்திருப்பீர்கள். இதைப்போலவே உங்களுக்கு இன்னும் பல வழிகள் தெரிந்திருக்கும். உங்களுக்கு பண உதவி முதல்
மற்ற உதவிகள்... எனக்கு எப்படி தெரியும். இந்த பட்டறையின் நோக்கம் பசிப்பிணி போக்குவது இல்லை. மக்களுக்கு தமிழில் இணையத்தில் என்ன செய்யலாம் என்ற விழிப்புணர்வை
ஏற்படுத்துவதே. பதிவுகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படும் என்று பலர் நம்புகிறார்கள். அதற்காக உழைக்கிறார்கள். தமிழில் கற்க தமிழ்ப்படுத்தவேண்டிய துறை சார்ந்த விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது.
அதை இலவசமாக உருவாக்கிறார்கள்.


தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் கூட படிக்க முடியாமல் தவிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு உதவுமா?
இன்று உதவவில்லை என்றாலும். நாளை கட்டாயம் உதவும். தமிழ்ப்படுத்தப்பட்ட லினக்ஸ் கிடைக்கிறது இதனால் ஏழைக்குழந்தைகளுக்கு கணினி கற்பது சுலபமாக்க முடியுமா முடியாதா. ஏன் நீங்களே கூட
ஏழைக்குழ்ந்தைகளின் படிப்பிற்கு இணையத்தை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்றே ஒரு பட்டறை நடத்தலாம் அதற்கும் இதைப்போன்றே உதவ முன்வருவார்கள்

எனக்கு தெரிந்து ஒரு குழு, சென்னையில் உள்ள சேரி வாழ் குழந்தைகளுக்கு, எந்த விளம்பரமும் இன்றி மாலை வேளைகளில், படிப்பு சொல்லித் தருகிறார்கள்.?
எனக்கு இணையத்தின் மூலமாகத்தான் இந்த செய்தியே தெரிகிறது. இவர்களுக்கு என்ன மாதிரி இன்னும் உதவ முடியும் என்று நினைக்கிறீர்கள். தன்னார்வ மக்கள் இன்னும்
எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று ஒரு கூட்டைமைப்பு உருவாக்கலாம். அவர்களுக்கான தொடர்புளை இந்த மாதிரி தளங்கள் மூலம் ஒருங்கிணைக்கலாம்.
நீங்கள் பங்கெடுத்த பட்டறை, நீங்க செலவு செய்து உருவாக்கிய பட்டறை என்று மட்டும் உங்கள் போக்கில் இருந்திருந்தால், எனது கருத்தை நான் இவ்வாறு முன் வைத்திருக்க மாட்டேன்.ஆனால் பட்டறை நடத்தியதை பெரிய சாதனையாகவும், தமிழ் வளர்ச்சிக்காகான அடிக்கலை நாட்டியதை போலவும்,தமிழில் blog வைத்திருப்பவர்கள் புத்திசாலிகள் மற்றும் உயர்ந்தவர்களை
போலவும்,அவ்வாறு இல்லாதவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் அல்லது சாதரண மனிதர்களை போன்று சித்தரிக்கும் சில பதிவுகளை காண நேர்ந்ததால் தோன்றிய கருத்துக்கள் தான் இவை
.

'ஆட்டோவில் நசுங்கிய தயிர்சாதங்களை வழித்து, டப்பாக்களை க்ளீன் செய்துகொண்டிருந்தார் பாலபாரதி' 'தான் சாப்பிட்ட இடத்தை சுத்தமாக நீரூற்றி துடைத்துக்கொண்டிருந்தார் மா சிவக்குமார்'. எளிமையின் உருவமாக இருக்கும், இந்த இரண்டு வரிகளும் என்னுள்ளத்தில் என்றென்றும் இருக்கும். இவர்களெல்லாம் யாரென்று தெரியுமா உங்களுக்கு. கொஞ்சம் இந்த
பட்டறையை வழிநடத்திய பலரின் பின்புலத்தை படித்துவிட்டு வாருங்கள் அய்யா. தங்கள் வாழ்வாதார பணிகளைத்தாண்டி வெறும் தமிழார்வத்தால் இணைந்தவர்களின் இறுமாப்பு கொஞ்சம் அதிகம் எங்காவது வெளிப்பட்டிருந்தால் அவர்களுக்காக நான் தங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். நீங்கள் உங்கள் கருத்துக்களை அப்படிப்பார்த்த தளத்தில் நேரடியாக தெரிவித்திருந்தாலே திருத்துக்கொள்வார்களே.

மேலும் நான் கடந்து வந்த சில பதிவுகள் தங்களுடைய புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்காகவும்,ஒரு தரப்பினரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்களை தாக்குவதற்காகவோ உருவாக்கியுள்ளனரே தவிரதமிழ் வளர்ச்சி என்பதர்கான எந்த வித அறிகுறியும் தெரியவில்லை.
புத்திசாலித்தனமிருப்பது காண்பிப்பதற்கு தானே. ஒரு குறிப்பிட்ட இனத்தை தாக்குபவர்கள் எங்கும் இருப்பதால் வளர்ச்சி நிற்கிறது என்பது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சு போடுவதாக இருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு உங்கள் அளவுகோல் என்ன. தமிழில் உங்களுக்கு என்ன கிடைக்கவில்லை இணையத்தில். கூறுங்கள் செய்ய முயல்லாம். ஒரு இனத்தை தாக்குபவர்கள் இருந்தால் அதற்கு மேலும் சிலரையும் அழைத்து வந்து வாதம் புரியுங்கள் முடிந்தால். இல்லை என்றால் அவ்வாறு தாக்குபவர்களை சட்டை செய்யாமல் தமிழை வளர்க்க முயலலாம். தமிழை யாரும்
வளர்க்க வேண்டாம் அது தன்னாலேயே வளரும் அவரவர் அவர் துறை பற்றி தமிழில் கொண்டுவந்தாலே போதும். உங்கள் துறையை பற்றி எழுத முயலுங்கள். அதுவே போதும்.

உண்மையில் இந்த பட்டறையின் நோக்கமென்ன?
ஆரம்ப சில பத்திகளிலேயே இதைப்பற்றி விளக்கிவிட்டேன் என நினைக்கிறேன்.

இது என் கருத்து மட்டுமே... பதிலை பற்றிய எதிர்பார்ப்புடன்............................... உரிமைத்துறப்பு (டிஸ்கி) போட ஆரம்பித்திலிருந்தே தெரிகிறது வலைப்பதிவு வாசிதான் சும்மா வம்பிழுக்கிறோர்களோ என்று தோன்றுகிறது அல்லது வலைப்பதிவதற்கான முதல் தகுதி வந்துவிட்டது ;-)

..............தமிழ் தெரிந்தவன்........................
இந்த மாதிரி ஆளைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். microprocessorக்கு தமிழில் என்ன என்று நிரம்ப நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன். தயவு செய்து சொல்லவும்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Superru
துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
பொறுங்க. அவர் வந்து பதில் தரலாம்.
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
ஏ அப்பா! என்ன பொறுமையுடன் பயனுள்ள பதில் அளித்திருக்கிறீர்கள்.
அவனவன் நாம் ஒன்றும் செய்ய வில்லையே என்று வெட்கப் பட்டுக் கொண்டிருக்கிறான்.இதிலே அவரவ்ர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதை விட்டு கேள்விகள் கேட்பதைப் பாருங்கள்.
எனக்கு இணையத் தமிழ் கற்றுக் கொடுத்து தமிழின்பம் அளிக்கும் பதிவர்கட்கு இதயங் கலந்த நன்றி.
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
சத்தியா, தமிழ் அறிந்தவர் பின்னூட்டம் இடம் எல்லாம் போய் இந்தப் பதிவுக்கான இணைப்பையும் தர முடியுமா ;)

நல்ல பதில்கள்.

//..............தமிழ் தெரிந்தவன்........................
இந்த மாதிரி ஆளைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். microprocessorக்கு தமிழில் என்ன என்று நிரம்ப நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன். தயவு செய்து சொல்லவும். //

;)
Voice on Wings இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை :)

//microprocessorக்கு தமிழில் என்ன என்று நிரம்ப நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன். //

நுண்செயலி என்றுக் கூறலாம். 'நுண்'ணை விட்டு விட்டு, வெறும் செயலி என்று பலர் உபயோகிப்பதுவும் சரியே (ஆங்கிலத்தில் processor என்பது போல்.) 'மிகையுரை மாற்றல் விதிமுறை' (http) போன்ற இதர தமிழாக்கங்களும் வேண்டுமா? :)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கும் வந்திருக்குங்க.... சொல்ல நினைத்ததை மிக அழகாக தெளிவாக புரியும் படி சொல்லி விட்டீர்கள். நன்றி.
siva gnanamji(#18100882083107547329) இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விளக்கம்!

தமிழ்தெரிந்தவர் தெளிவடைந்தாரா என்பதைத் தெரிவிக்கட்டும்.
ப்ரியன் இவ்வாறு கூறியுள்ளார்…
/*microprocessorக்கு தமிழில் என்ன என்று நிரம்ப நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன். தயவு செய்து சொல்லவும்.*/

அருமை....எனக்கும் இதுமாதிரி நிரம்ப சந்தேகம் இருக்கு தமிழ் தெரிந்தவரே, கொஞ்சம் தீர்த்து வைக்கிறீங்களா?
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
//எனக்கு தெரிந்து ஒரு குழு, சென்னையில் உள்ள சேரி வாழ் குழந்தைகளுக்கு, எந்த விளம்பரமும் இன்றி மாலை வேளைகளில், படிப்பு சொல்லித் தருகிறார்கள்.? //
யார் என்னன்னு கொஞ்சம் விவரமா சொல்லச் சொல்லுங்கப்பா.. ஏதாச்சும் செய்ய முடியுமான்னு பார்க்கலாம்.

/*microprocessorக்கு தமிழில் என்ன என்று நிரம்ப நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன். தயவு செய்து சொல்லவும்.*/
சொன்னா எனக்கும் சொல்லுங்கப்பா.. ஆமாம், sim card உக்கு என்ன சொல்லுவீங்க?
மணியன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாகச் சொன்னீர்கள்.
பேசுவதை இருமுறை சிந்தித்து பேசவும் பதிவுலகில் நான் கற்றுக் கொண்டது. அவர் விரைவில் பதிவுகளைப் பதிப்பாராக !
ச.மனோகர் இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் தாத்தா 'தமிழ் தெரிந்தவரே..' தங்களின் கருத்து ஏற்புடையதல்ல... வருங்கால கணிணி சமுதாயத்திற்காக, தமிழை இப்போதே கணிணியில் பரவலாக அறிமுகம் செய்ய இந்த பட்டறை நிச்சயம் உதவும்.அதற்காக பாடுபட்டவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.உங்கள் எள்ளல் அடங்கிய கோபம் தேவையற்றது.வெட்டி பரபரப்புதான் உண்டாகும்.
கண்மணி/kanmani இவ்வாறு கூறியுள்ளார்…
சபாஷ் சத்தியா அந்த பின்னூட்டம் எந்த நோக்க்கத்தில் போடப்பட்டிருந்தாலும் [வம்பிழுக்கவோ இல்லை விஷயமறியவோ] உங்கள் பதில்கள் அருமை.இதை விடத் தெளிவாக சொல்ல முடியாது.

தமிழ்தெரிந்தவன் [பேரிலேயே உறுத்துகிறது]அறிய:

எந்த ஒரு செயல்பாடும் எல்லாத் தேவைகளையும் முழுமைப் படுத்த முடியாது.
அது என்ன செய்யும் இதனால் என்ன லாபம் என்று பார்த்துக் கொண்டிருந்தால் வளர்ச்சியிருக்காது.
வளர்ச்சி என்பது ஒரு சங்கிலித்தொடர்.ஒன்றிலிருந்து ஒன்றாகத்தான் மேம்பட முடியும் .சூ மந்திரக்காளி என்ற ஒற்றை மந்திரத்தில் கிடைத்து விடாது.ஒருவேளை அந்த மந்திரம் நீங்கள் அறிந்தால் சொல்லுங்கள்.
இது வலைப் பதிவின் ஆரம்ப வளர்ச்சிதான்.
எங்கள் பதில் கூட உங்களைக் கோபப்படுத்த இல்லை தெளிவுபடுத்தவே.
கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக வேப்பில்லை அடித்திருக்கிறீர்கள். 'தெளிஞ்சிடும்'
:)
தருமி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பொறுமையான அர்த்தமுள்ள பதில்கள்.

வாழ்த்துக்கள்
Yuvraj Sampath இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பர்களே...
கதவு திறந்திருந்தால் தான் காற்று வறும்..
காது திறந்திருந்தால் தான் ஓசை வறும்..
கண்கள் திறந்திருந்தால் தான் பார்வை வறும்..
இதயம் திறந்திருந்தால் தான் அன்பு வறும்..


பாவ‌ம் அவ‌ர்..விட்டு விடுங்க‌ள்.
Yuvraj Sampath இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பர்களே...
கதவு திறந்திருந்தால் தான் காற்று வறும்..
காது திறந்திருந்தால் தான் ஓசை வறும்..
கண்கள் திறந்திருந்தால் தான் பார்வை வறும்..
இதயம் திறந்திருந்தால் தான் அன்பு வறும்..


பாவ‌ம் அவ‌ர்..விட்டு விடுங்க‌ள்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
கேள்விகளுக்காக கோபப்படாத, அழகான பதில்கள்.
//ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எதாவது செய்யலாமே? அதற்கு உங்கள் பட்டறை எந்த வகையிலாவது உதவுமா?//
அத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு, 'நாம் என்ன செய்ய இயலும்' என்று பதிவுகள் மூலம் விவாதிக்க, முடிவெடுக்க, ஒரு வாசலைத் திறக்க உதவுவதே ஒரு வகையில் உதவிதானே.
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் தெரிந்தவருக்கு சொல்ல விட்டுப் போனது.

தமிழ் தெரிந்தவரே - உங்களுக்குத் தமிழ் தெரிகிறது. கணினியில் வலைப்பதிவில் மறுமொழியில் எப்படி தமிழில் எழுதுவது என்றும் தெரிகிறது. அதனால் தான் உங்கள் கருத்துக்களை நாலு பேருக்கு தெரிவிக்க முடிகிறது. ஆனால், தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பி ஆனால் கணினி, வலைப்பதிவு, கணினியில் தமிழ் இவை குறித்து எதுவுமே தெரியாத ஒரே ஒருவருக்காவது இந்த பட்டறை உதவி இருந்தாலும் பட்டறையின் நோக்கமும் அதுவே. வெற்றியும் அதுவே.

மரபார்ந்த ஊடகங்களில் உள்ள தணிக்கை, முறைமை, தாமதம் காரணமாக சமூகத்தின் முகம் காட்டும் கண்ணாடியாக அவை இல்லை. அந்தக் குறையை வலைப்பதிவுகள் போக்கும். ஒத்த கருத்துள்ள நண்பர்களை அடையாளம் காண, அவர்களுடன் இணைந்து செயல்பட இது ஒரு அருமையான வழி. கல்வி, ஏழ்மை போன்று நீங்கள் குறிப்பிடும் பிரச்சினைகளில் ஆர்வம் உள்ள பலரும் கூட வலைப்பதிவுகள் மூலம் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

பொன்ஸ், சத்தியா - Dream india 2020 என்று ஒரு இளைஞர் குழு சென்னை, மும்பை என்று பல ஊர்களிலும் ஏழைக் குழந்தைகளுக்கு ஓய்வு நேரத்தில் பாடம் சொல்லித் தருகிறார்கள்.

http://dreamindia2020.org/
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் தெரிந்தவர் என்னை மட்டும் தான் கேள்வி கேட்டார் என்று நினைத்து அவருக்கு என் பதிவில் வந்த மறுமொழிகள் கீழே.

---

பாரி.அரசு said...

செந்தில்குமார் அவர்களுக்கு,

பட்டறை பற்றிய விவாதம் இருக்கட்டும்

//தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் கூட படிக்க முடியாமல் தவிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு உதவுமா?
//

கிராமப்புற மாணவர்களுக்கு கணிணி கல்விக்காகவும்,
ஏழை மாணவர்கள் கல்வி உதவிக்காகவும் நான் எனது நண்பர்கள் பலரும் 'சிந்தனை அலைகள்' என்ற அமைப்பில் செயல்படுகிறோம்.

உங்களால் இப்படிப்பட்ட அமைப்புகளில் சேர்ந்து செயல்பட முடியுமா?

முடியுமெனில் தொடர்புக்கொள்ளுங்கள் பேசுவோம், செய்வோம்... நிறைய மாற்றங்கள் வர வேண்டும் என்கிற ஆசையில் எல்லோரும் முயற்சி செய்வதை வெறும் கேள்விகளாக்கி கொச்சைபடுத்துவது வேண்டாமே!

வெறும் கேள்விகள் கேட்பது எளிது நண்பரே! ஓவ்வொன்றையும் செயலுக்கு கொண்டு வர எவ்வளவு கடினமானது என்பது சொல்லி புரிவதில்லை!

ரவிசங்கர் said...

செந்தில் குமார் - பட்டறையில் ஈடுபட்டவர்கள் தங்கள் நியாயமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவே பார்க்கிறேன். வலைப்பதியாதவர்களை குறைத்து யாரும் நினைப்பதாக நான் கருதவில்லை. தமிழ்ப் பதிவுலகில் தரமான, பயனுள்ள பதிவுகள் நிறையவே உண்டு. ஒரு சில பதிவுகளின் குறையால் மொத்த பதிவுலகையும் தவறாக நோக்கத் தேவை இல்லை. சமூகத்தில் என்ன இருக்கிறதோ அதுவே வலைப்பதிவிலும் பிரதபலிக்கும். வலைப்பதிவு உள்ளடக்கத்தில் குறை காண்கிறோம் என்றால் சமூகத்தைத் தான் முதலில் மாற்ற வேண்டும்.

கல்வி அறிவின்மை, ஏழ்மை என்று கவனிக்க வேண்டிய பல பிரச்சினைகள் நிறைய உண்டு. வலைப்பதிவர்களே கூட இலட்சக்கணக்கில் இது போன்ற நடவடிக்கைகளில் பணம் உதவி இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்க வலைப்பதிவு ஒரு கருவியாக இருப்பது நல்லது தானே?

கிராமத்தில் படிக்கும் பிள்ளை முதற்கொண்டு கணினி என்றாலே ஆங்கிலம் என்ற தேவை இல்லாத மருட்சி இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் அந்த மருட்சியைப் போக்கும். இதனால் தமிழ் வளருமா என்றால் வளரும். நவீன உலகில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காத போது, அதைத் தமிழைக் கொண்டு அணுகுவதற்கான வசதியை, விழிப்புணர்வைப் பரப்புவது மிகவும் முக்கியம்.
வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
//ஆமாம், sim card உக்கு என்ன சொல்லுவீங்க?//
"subscriber information module" சுருக்கமே sim card , எனவே அதற்கு தமிழ்ப்படுத்தினால், பயனர் விழைவு அடையாள அட்டை எனக்கூட சொல்லலாம்!

இந்த உலகத்தில் எல்லாமே கேள்விகளுக்கு உட்பட்டது தான் இறைவன் உட்பட, எனவே அவர் கேள்விக்கேட்டால் கேட்டு விட்டு போகட்டுமே. நாம் நிதானம் இழக்க தேவை இல்லை.நாம் எடுத்து சொன்னல் விளங்கிகொள்வார்!

தமிழில் முதல் கருத்துப்படம் போட்டது பாரதியார் தான் சுதேசமித்திரனில், இன்று எல்லாப்பத்திரிக்கைகளிலும், அதுவே மிகப்பெரும் ஆயுதமாக இல்லையா? கருத்துப்படத்திற்காக சிறை சென்ற பத்திரிக்கையாளர்கள் கூட இருக்கிறார்கள். எனவே என்ன செய்தோம் என்பதன் விளைவை எதிர்காலம் தீர்மானிக்கும்.

சென்னை பதிவர் பட்டறையும் அத்தகைய முன்னோடி முயற்சிகளில் ஒன்று தான். என்னற்ற கருத்து களஞ்சியங்களை, புதிய சிந்தனா வாதிகளை, எழுத்தாளர்களை உருவாக்கும் ஒரு களமாக பதிவுகளும் ,பட்டறைகளும் செயல்படும் என்பதை அவர் அறியாமல் எல்லாவற்றுக்கும் ஒரே அளவு கோல் வறுமை ஒழிப்பு என்ற ஒன்றை வைத்தே பார்க்கிறார்.
மஞ்சூர் ராசா இவ்வாறு கூறியுள்ளார்…
sim card - பயனர் தகவல் அட்டை என சொல்லலாம்.

பதிவர் பட்டறை பலரின் உழைப்பால் வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. அதன் நோக்கமும் நிறைவேறியிருக்கிறது. ஒரு சில குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு நல்ல நோக்கத்தில் நடத்தப்பட்ட பட்டறையை குறை கூறுவது நல்ல செயலல்ல. இது போன்ற கேள்விகள் வருவது சகஜமே என விட்டு விடாமல் நல்ல முறையில் பொறுமையுடன் விளக்கியிருக்கிறீர்கள்.

கற்றது கைம்மண்ணளவு என்பதை நாம் அனைவரும் புரிந்துக்கொள்ளவேண்டும்.
வெட்டிப்பயல் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான விளக்கம் சத்யா!!!
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
நெல்லை காந்த், துளசி கோபால்,
அவர் வர வேண்டும் என்று தான் எண்ணமும். பார்க்கிறாரா பார்க்கலாம்.

தமிழன்,
நன்றி.

\\அவனவன் நாம் ஒன்றும் செய்ய வில்லையே என்று வெட்கப் பட்டுக் கொண்டிருக்கிறான்.இதிலே அவரவ்ர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் \\

\\கேள்விகள் கேட்பதைப் பாருங்கள்.\\
கட்டாயம் கேள்விகள் கேட்கட்டும். நேரடியாக கேட்டிருக்கிறாரே. அனானியாக வந்து கண்டபடி எழுதி இருந்தால் நான் இந்த பதிவே எழுதி இருக்கமாட்டேன்.
வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
//"subscriber information module" சுருக்கமே sim card , எனவே அதற்கு தமிழ்ப்படுத்தினால், பயனர் விழைவு அடையாள அட்டை எனக்கூட சொல்லலாம்!//

என்பதில் பிழை ஒன்று ஏற்பட்டுவிட்டது,"identity " என்பதற்கு பதில் "information" எனப்போட்டுவிட்டேன்.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
ரவிசங்கர்,
நான் பார்த்த 4 -5 பதிவுகளில் கட்டாயம் போடுகிறேன். உங்கள் அபார உழைப்பை பாராட்டுகிறேன்.

VoW,
விக்சனரி குழுமத்தில் இதைப்பற்றி ஏற்கனவே ஒரு முறை உரையாடினோம். process(chemical process, food processing, micro processing ) என்பதற்கு இணையான சரியான சொல் பரிந்துரைக்கவும்.

நந்தா, சிவஞானம்ஜி, ப்ரியன்,
பொன்ஸ்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. SIM cardக்கு இன்னும் சரியான சொல் தேடலாம்.

மணியன்,பாபு மனோகர், கண்மணி, தருமி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
கோவி.கண்ணன், சம்பத்,
புதிதாய் வருபவராய் இருக்கலாம். அவரை எப்படி விட முடியும்? விளக்கம் கேட்கிறார் சொல்கிறோம் அவ்வளவு தானே. யாரும் அவர் மேல் தவறு காண முடியாது. 'தமிழ் தெரிந்தவருக்கு' கடைசி கேள்வி கிண்டலுக்காக அல்ல எல்லோரையும் கொஞ்சம் யோசிக்கத்தூண்டத்தான்.

சுல்தான், மஞ்சூர் ராசா,
நன்றி,
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வவ்வால்,
இன்னும் எளிமையான வார்த்தைகளை தொகுக்க' பயனர் அடையாளப்பொதி(Subscriber Information Module) அட்டை என்று கூட கூறலாம். ஆனால் எளிமையாயில்லை.
\\
இந்த உலகத்தில் எல்லாமே கேள்விகளுக்கு உட்பட்டது தான் இறைவன் உட்பட, எனவே அவர் கேள்விக்கேட்டால் கேட்டு விட்டு போகட்டுமே. நாம் நிதானம் இழக்க தேவை இல்லை.நாம் எடுத்து சொன்னல் விளங்கிகொள்வார்!\\
முன்பே சொன்ன மாதிரி, அவர் புதியவராய் இருக்கலாம். விளக்க வேண்டியது நம் கடமை என்றே இந்த பதிவை இட்டேன்.

informationஐ கூடவிடாம சரி பண்ணிட்டீங்க.
நன்றி,
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
சத்தியா உங்களை ஒவ்வொரு பதிவா போய் அவருக்குப் பதில் சொல்லச் சொல்லலை. அவருக்குப் பதில் சொல்ல விரும்புகிற எல்லாரும் இங்க வந்து ஒரே இடத்தில் சொல்லலாம்னு சொன்னேன் :)
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் தெரிந்தவன் : //ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எதாவது செய்யலாமே? அதற்கு உங்கள் பட்டறை எந்த வகையிலாவது உதவுமா?//

இந்த நிலைக்கு மக்கள் வந்ததற்கும் தமிழ் மொழி அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு அழிக்கப்பட்டு மாற்றான் மொழிகளை (சமசுகிருதத்தை சேர்த்தே) திணிக்கப்பட்டதற்கும் நிறையவே சம்பந்தங்கள் உண்டு. அனைவரும் தமிழில் போதிய படிப்பறிவு பெற்றால் இவர்களின் வாழ்க்கைத்தரத்தை இவர்களாகவே முன்னேற்றிக் கொள்வார்கள். ஜப்பான் மற்றும் சீனர்கள் அவர்கள் மொழியை மட்டும் அடிப்படையாக கொண்டு சாதித்துக்கொண்டு வரவில்லையா? அதுபோல்தான் இது தமிழிலும் முடியும். முயற்சி செய்தால் அடைய முடியாதது எதுவுமில்லை.

தமிழ் தெரிந்தவர் ஐயா கேள்விகளுக்கு சதயா நிதானமாக பதில் அளித்திருக்கிறார். இப்போது தமிழ் தெரிந்த ஐயாவே தனது கேள்விகளுக்கு பதில் கொடுப்பாரா? உதாரணத்திற்கு, ஒரு வேளை சோறுகூட இல்லாமல் துன்பப்படுகிற மக்களுக்கு இவரு என்ன மாற்று வைத்தியம் வைத்திருக்கிறார்?
சிறில் அலெக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
சத்தியா,
பொறுமையாக அழகாய் பதிலளித்திருக்கிறீர்கள். பட்டறையின் வெற்றியில் பதிவர்கள் எல்லோரும் பெருமிதமடைந்துள்ளோம் என்பதற்கான இன்னுமொரு சான்ரு உங்கள் பதிவு.

குறைகூறுபவர்களும் தேவைதான். இவர் சொல்வட்தைப்போல சேவை முயற்சிகளையும் ஆரம்பிக்கலாம். அதையும் பெங்கலூரு சந்திப்பில் துவங்கினார்கள் என நினைக்கிறேன்.

பாராட்டுக்கள்
thiagu1973 இவ்வாறு கூறியுள்ளார்…
ஒருத்தருக்கு தெரியாத விசயத்தை சொல்லிகொடுப்பதுதான் இதுவும் .

பதிவர் பட்டறைகள் மூலம் தமிழ் வளர்ந்ததா இல்லையா என்ற கேள்வியை விட , இப்படி கேட்பதை விட எதாவது நாமும் செய்யலாம் என நினையுங்கள் தமிழ் தெரிந்தவரே!

இன்று விதைகளை விதைக்கும் இந்த கரங்களை ஊக்கமான வார்த்தைகள் சொல்லி வளப்படுத்துங்கள்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த தமிழ் தெரிந்தவன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டிருக்கும் நபர், தமிழ் வலையுலகத்துக்கு ஏதோ நேற்றுத்தான் வந்தமாதிரி பின்னூட்டம் போட்டிருப்பது நம்பும்படியாக இல்லை. ஒவ்வொரு முறை பதிவர் பட்டறையோ சந்திப்போ நடக்கும்போதும், அல்லது தமிழ் வலையுலகில் ஏதாவது உருப்படியாக நடக்கும்போதும், தாறுமாறாகப் பின்னூட்டங்கள் வரும். சிலசமயம், திரட்டிகளுடன் தொடர்பு வைத்துக்கொள்பவனெல்லாம் ஜெயிலில் களி தின்னவேண்டும் என்று வரும், பிற பதிவர் சந்திப்புகளில் ரவுடிகள் அனைவரும் குடித்துவிட்டு பிரியாணி பாக்கெட் தின்றுவிட்டு உளறுவது போன்றும் சித்தரித்து பின்னூட்டங்கள் வரும். அந்த டெக்னிக்கெல்லாம் பழசாகிப்போனபிறகு, இப்போது நாகரீகமாக பின்னூட்டம் போடுவது மாதிரி இந்த பட்டறையால் யாருக்கு என்ன பிரயோஜனம், ஏழைபாழைக்கு சோறு கிடைக்குமா என்ற மாதிரி போடுகிறார்கள் போல என்றுதான் தோன்றுகிறது. அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா.

//ஒரு தரப்பினரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்களை தாக்குவதற்காகவோ உருவாக்கியுள்ளனரே தவிர//

தமிழ் தெரிந்தவனோட இந்த டயலாக்கைப் பாருங்க நான் சொல்றது புரியும். என்னப்பு, பட்டறையில ஒரு தரப்பினரையோ குறிப்பிட்ட இனத்தையோ தாக்கினீங்களா என்ன? ;-)
பட்டுக்கோட்டை பாரி.அரசு இவ்வாறு கூறியுள்ளார்…
நேற்று இது தொடர்பாக நிறைய நண்பர்கள் இணையஉரையாடலில் பேசியபோது நான் சொன்ன ஒரு தகவலை இங்கு சேர்க்க விரும்புகிறேன்...

எல்லாவற்றுக்கும் நொள்ளை, இது நெட்டை அது குட்டை என்று சொல்லிக்கொண்டே போகலாம்... ஆனால் ஒவ்வொரு அடிதள செயலுக்கும் மிக கடுமையான போராட்டம் தேவைபடுகிறது... அதை புரிந்துக்கொண்டு...

குறை சொல்கிற மனிதர்கள் அப்படிதான் இருப்பார்கள் அவர்களை சமாதானம் செய்வதோ அல்லது அவர்களை நல்வழிபடுத்துகிறேன் என்று இறங்குவதோ... நாம் செய்கிற செயலுக்கு தடைகல்லாக தான் அமையும். எனவே இதை கடந்து நாம் பயணப்பட்டுக்கொண்டே இருக்கணும்...

பொறுமையாக பதிலளித்த சத்தியாவுக்கு வாழ்த்துகள்.
siva gnanamji(#18100882083107547329) இவ்வாறு கூறியுள்ளார்…
processing பதப்படுத்துதல்; பதனப்படுத்துதல்
இந்திய அரசின்food processing அமைச்சகம் பதப்படுத்துதல் என்பதைப்
பயன்படுத்துகின்றது

தருமி, ராம.கி(வளவு)ஆகியோர்
இச்சொல்லை தமிழாக்குவதில் உதவ முடியும்
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வெட்டிபயல்,மாசிலா, சிறில், தியாகு,
நன்றி.
ரவி,
OK.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
அனானி,
தெரிந்ந பதிவராகவே இருந்துவிட்டு போகட்டும். அவர் கேட்ட கேள்விகள் சரியான புரிதல் இல்லாமல் தானே வந்தது. அவரின் இனம் பற்றிய விடயங்கள் தனிப்பட்டவை அவர் பதிவர்கள், தமிழிணையம் பற்றி எழுப்பிய கேள்விகள் இன்னும் வலைபதிய வருவோர்க்கும் இருக்கலாமே இன்னும் 100 பேர் வரும் வேளையில் இன்னும் பல கேள்விகள் வரும் அவற்றை எல்லாம் பட்டறையின்பால் கேட்கப்பட்டவையாக பார்க்காமல் தனிப்பட்ட கேள்விகளாக பதிளித்தால் தான் வருபவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்ற எண்ணமே.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
பாரி. அரசு,
உங்கள் மற்ற முயற்சிகள் பற்றி வேறு சில பின்னூட்டங்களில் பார்த்தேன். தமிழ்99ல் மிகுந்த உற்சாகத்தோடு இருப்பது மகழ்ச்சி. உங்கள் மற்ற தொண்டுகளும் சிறக்க வாழ்த்துக்கள்.
அனானிக்கு பின்னூட்டமிட்டதே தான் உங்கள் கருத்துக்கும். பதில் சொல்லி மாளாது தான் இருந்தாலும் நீங்களெல்லாம் ஒரு திருவிழாவுக்கு உழைத்த களைப்பில் இருப்பீர்கள். ஏதோ என்னால் முடிந்தது வந்து கேள்வி கேட்பவர்களுக்கு பதிலாது சொல்லிக்கறேன். ;-)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
சிவஞானம்ஜி,
மீண்டும் வருக. விக்சனரி குழுமத்தில சில வாரங்களுக்கு முன்பே ஏற்கனவே இதை கேட்டுவிட்டேன். ராமகி அய்யா பதிலளிப்பார் நேரம் கிடைக்கையில் வந்து பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். சும்மா ஒரு தூண்டுதலுக்கு தான் அந்த கேள்வி இங்கே.
Balaji Chitra Ganesan இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதில்கள்! Pessimists எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். 'தமிழ் அறிந்தவரின்' உதவாக்கரை கருத்துகள்கூட மேலும் பங்களிக்கவேண்டும் என்ற எண்ணத்தையே பலருக்கு அளித்திருக்கும்!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இத விட அருமையா புரியர மாதிரி பதில் சொல்லியிருக்க முடியாது. வாழ்த்துக்கள் சத்யா
இலவசக்கொத்தனார் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்.

பல பதிவுகளில் அந்த பின்னூட்டத்தைப் படித்த பொழுது எனக்கு கோபம்தான் வந்தது. இவ்வளவு பதிவுகளில் நேரம் செலவழித்து இத்தனை பின்னூட்டங்கள் போடுவதற்குப் பதிலாக நீங்கள் உருப்படியாக ஏதாவது செய்திருக்கலாமே எனக் கேட்க கை துறுதுறுத்தது. கஷ்டப்பட்டே அடக்கிக்கொண்டேன்.

கேட்ட கேள்விகளும் கேட்கப்பட்ட தொனியும் சந்தேகமாகவோ பதிலை எதிர்பார்த்து கேட்கப்பட்டதாகவோ தோன்றவில்லை.

ஆனால் நிதானமாக நீங்கள் சொல்லிய பதில்கள் அருமை. உங்கள் நிதானத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

ஊதுவதை ஊதிவிட்டீர்கள், விழ வேண்டிய காதில் விழுந்தால் சரி.
இராம.கி இவ்வாறு கூறியுள்ளார்…
process பற்றிக் கேட்டிருந்தீர்கள். அதைச் செலுத்தம் என்றே நான் இப்பொழுது சொல்லிவருகிறேன். சிலர் செயல் என்று சொல்லி வருகிறார்கள். தொடக்க காலத்தில் நானும் செயல் என்று புழங்கியிருக்கிறேன். இப்பொழுது அது தவறென்று உணர்ந்து கூடியவரை கவனமாக இருக்கிறேன்.

[சொற்களின் துல்லியம் நம்மில் பலருக்கும் புர்படாமல் இருக்கிறது. பலகாலம் ஒப்பேற்றும் தமிழில் பேசிக் காலத்தை ஓட்டிவிட்டோம். ஆங்கிலத்தில் அறிவியற் சிந்தனை வளர்ந்ததே இப்படிச் சொற்துல்லியம் பார்த்ததால் தான். இன்ன கருத்திற்கு இதைத் தான் பயபடுத்த வேண்டும் என்று ஆங்கிலவழி அறிவியல் அழுத்தமாகச் சொல்லுகிறது. அவர்களின் நுட்பியற் சொற்தொகுதி வளர்ந்ததே இந்த துல்லிய நடைமுறையால் தான்.]

process என்பது procede, procedure என்பவற்றோடு தொடர்பு கொண்டது. procede, procedure என்பவை தன்வினையாக முன் செல்லுதலைக் குறிக்கும். process என்பது பிறவினையாக இன்னொன்றைச் செலுத்ததலைக் குறிக்கும். விவரமாக ஒரு முறை எழுத முயல்வேன். இப்பொழுது வ்வேறு சில வேலைகளில் ஆழ்ந்திருப்பதனால், உடனடியாக முடியாது. மன்னியுங்கள்.

பட்டறையின் நோக்கத்தைக் கேள்வி கேட்டவர் சிந்தனைக் குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறது. இவர் சொல்லுகிற பணிகள் தேவையானவை தான்; ஆனால் அவற்றைச் செய்வது வேறு களனில், வேறு புலத்தில் என்று இவர் ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்?

இரண்டையும் ஏன் பிணைத்துப் பார்க்கிறார் என்று புரியவில்லை.

உங்கள் விளக்கங்கள் அருமை.

அன்புடன்,
இராம.கி.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
பொறுப்பான பொறுமையான பதில்கள்! கேள்வி கேட்ட நண்பருக்கு திருப்தியா இருக்கும்னு நம்புரேன்..
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
சின்ன அம்மணி, தஞ்சாவூரான்,
வாங்க. கருத்துக்கு நன்றி.

கொத்தனார்,
இவ்வளவு நாள் எங்கே ஆளையே காணோம். நன்றி.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
சின்ன அம்மணி, தஞ்சாவூரான்,
வாங்க. கருத்துக்கு நன்றி.

கொத்தனார்,
இவ்வளவு நாள் எங்கே ஆளையே காணோம். நன்றி.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
இராம.கி அய்யா,
இங்க வந்ததுக்கே நான் பெருமைபடணும். நான் உங்களை மன்னிப்பதாவது. நீங்கள் எவ்வளவு ஆழமாக எழுதுகிறீர்கள். அதற்கான முயற்சி, உழைப்பை பார்த்து வியக்கிறேன்.

உள்ளீடு-> Process -> வெளியீடு என்றே கணினித்துறையில் பயன்படுகிறது. அதாவது, உள்ளீட்டை பயன்படுத்தி, பண்படுத்தி, பக்குவப்படுத்தி, உபயோகித்து பின் வெளியீடாகிறது. எந்த அளவுக்கு procedureன் வழியாக சரியாக வரும் என்று தெரியவில்லை.
உங்களின் விரிவான பதிவிற்கோ, பதிலுக்கோ, மிடற்குழு பதிலுக்கோ காத்திருப்பேன்.

வருகை தந்ததற்கு மீண்டும் நன்றி,
--சத்தியா
சிவா இவ்வாறு கூறியுள்ளார்…
சத்தியா,
தமிழன் கூறியதைப்போல பொறுமையுடன் பதில் எழுதியள்ளீர்கள் உங்கள் பொறுமைக்கு ஒரு ஜே!.இப்படி தாறுமாறாக கேள்விகளை கேட்பதனால் பெரிய அறிவுள்ளவராக காட்டிக்கொள்ளும் எண்ணமிருப்பின், அது அவர் தலையிலேயே சாணத்தை அள்ளி போட்டுக்கொள்வது போல் ஆகிவிடும். அதை எழுதிய அன்பர் யாரென்று தெரியவில்லை, உங்கள் பதில் பதிவிலிருந்து அவர் என்ன எழுதினார் என்பதை ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது. தொட்டனைத் தூறும் மணற் கேணி ... இந்த குறள் என்னைப்பொறுத்த வரை இப்பொழுது உணர்ந்து விட்டேன். இங்கு வந்து எழுத ஆரம்பித்த பிறகு என் தமிழ் அறிவு கொஞ்சம் கூடியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதைப்போலவே இன்னுமொறு முக்கியமான விஷயம் எ-கலப்பை. இதை உறுவாக்கிய தமிழ் நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் தாய் மொழியில் படிப்பதோ எழுதுவதோ ஒரு அலாதி இன்பம். தமிழ் வார்தை களஞ்சியத்தை நம்மால் முடிந்தால் நிறப்பலாமே தவிற நிறப்புவர்களை ஏன் குறை கூற வேண்டும்? தம்முடைய இயலாமையை தாம்தான் அகற்ற வேண்டும், பதிலாக அடுத்தவரை குறை கூறுவது தன்னை தானே இழிவு படுத்துவது போலாகும். அவரவர் தம் அறிவை இன்றல்ல என்றாவது ஒரு நாள் மற்றவர்களுக்கு பயன் தறும் வித்த்தில் உதவுவர்களேயானால் அதுவே அவர் வாழ்வதற்கான, வாழ்ந்ததற்கான பொருள் ஈட்டியதற்கு சமம். தஞ்சாவூரான் என்னும் அன்பர் ஒருவர் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது தமிழன் தன் குலத்தையே பிறித்துதான் பார்க்கிறான் என பல விடயங்கள் எழுதி இருந்தார். தமிழைக்காப்பாற்றுவது நம் கையில் தான் உள்ளது. அவர் எப்படி தொடங்குவது என்ற ஒரு வார்த்தை கேட்டிருந்தால் இந்நேரம் ஒரு சில யோசனைகளாவது கிடைத்திருக்கும். தொடங்குவோம் இல்லையா தொடங்கியவர்களை ஆதரிப்போம்
சிறில் அலெக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4