எனக்கும் சடப்பாண்டிக்கும் பலகால நட்பு. சடப்பாண்டி சென்னைத்தமிழ் காதலன். நான் அவன் காலைவாருவதும், அவன் என்னை தாக்குவதும், கருணாநிதி ராம்தாஸ் மாதிரி அப்படி ஒரு அதீத நட்பு. அரசியல் மீட்டிங்குகளில் திடீரென கேள்விப்படும் விஷயங்களில் சந்தேகம் வந்துவிடும் நம்ம சடபாண்டிக்கு, அல்லது ஏடாகூடமாக ஏதாவது கேள்வி கேட்டு நம்மை மடக்குவதில் சடபாண்டிக்கு அலாதி இன்பம். '' நைனா, புயநானூறுன்னா இன்னாப்பா? ''என்பான், அவனுக்கு விளக்கி முடிப்பதிற்குள் நமக்கு தொண்டைத்தண்ணி வற்றிவிடும். எது சரி பாணி கேள்விகள் அதிகம் அவனிடமிருந்து வரும். கத்திரிக்காய் கரீட்டா, கத்தரிக்காய் கரீட்டா என்பான்.சேட்டை சேட்டுன்னு கூப்பிடணுமா, சேடுன்னு கூப்பிடணுமான்னான் இன்னொரு நாளைக்கு, தாகம் எடுக்குமா, தாகம் அடிக்குமான்னான்... ஒரு நாளைக்கு. விளக்கெண்ணைக்கு பேரு வச்சது யாருன்னான் ஒருநாளைக்கு. அதுவாவது பரவாயில்லை, ஒரு தடவை 'எதிர்வூட்டு ஆயா, அயுகுது'ன்னான் கடைக்குள்ள வந்துகொண்டே. 'அடப்பாவி, பாட்டி போய்சேந்துட்டாங்களா'ன்னேன். 'ஒன் வாய கழுவுடா... பாட்டி நல்லாதான் கீது... சீரியல் பாத்துட்டு அயுகுது'ன்னான...